89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரம் சென்று வாழ்நாள் கனவை நனவாக்கிய முதிய தம்பதி

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரம் சென்று வாழ்நாள் கனவை நனவாக்கிய முதிய தம்பதி

மும்பை: ஒருமுறையாவது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி அதன் உச்சியில் கால் பதிக்க வேண்டும் என்பது மலையேற்ற சாகச வீரர்களின் கனவு, லட்சியமாக உள்ளது. இத்தகைய சூழலில் மகாராஷ்டிராவை சேர்ந்த 86 வயது முதியவரும் அவரது மனைவியும் எப்படியாவது எவரெஸ்ட் சிகரத்தை அருகில் இருந்து பார்க்க விரும்பினர். முதிர்வயது காரணமாக அவர்களால் மலையேறி செல்ல முடியாது. இருவரும் பல்வேறு ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்களை அணுகினர். இறுதியில் அன்டி தபா என்ற ஹெலிகாப்டர் விமானி அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

அண்மையில் இருவரையும் ஹெலிகாப்டரில் எவரெஸ்ட் சிகர பகுதிக்கு விமானி அன்டி அழைத்துச் சென்றார். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 29,031 அடியாகும். அந்த சிகரத்தின் அடிவாரத்தில் 17,000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதியில் கணவரும் மனைவியும் தரையிறங்கினர். அங்கிருந்து பனி சூழ்ந்த எவரெஸ்ட்டின் அழகை இருவரும் நேரில் ரசித்தனர். கைத்தடி உதவியுடன் எவரெஸ்ட் சிகர மலைப் பகுதியில் தட்டுத் தடுமாறி நடந்த கணவரை, அவரது மனைவி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். இந்த வீடியோவை ஹெலிகாப்டர் விமானி அன்டி தபா சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ குறித்து ஒரு வலைதளவாசி கூறும்போது, “கணவரை கைத்தாங்கலாக அழைத்துச் செல்லும் மனைவிக்கு தலைவணங்குகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6rP1w4R
via IFTTT