இரண்டாயிரத்து இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன், நள்ளிரவைக் கடந்த ஓர் அதிகாலை அது. குத்திக் கிழிக்கும் மார்கழிக் குளிர். நிறைமாதக் கர்ப்பினியான மரியாள் பிரசவ வலியால் துடிக்கிறார். அவரைத் தன் முதுகில் சுமந்தபடி வேகமாக நடக்கிறது அந்தக் கழுதை. மரியாளின் வேதனை முனகல்கள், அவரது கணவர் யோசேப்பை கண்ணீர் சிந்த வைக்கின்றன. ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசுவை ஈன்றெடுத்த மரியாளையும், நிம்மதி பெருமூச்சுவிடும் யோசேப்பையும், தெய்வக் குழந்தை இயேசுவையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் கழுதை. நாசரேத் என்ற சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து சற்றே பெரிய பட்டனமான ஜெருசலேம் வந்து சேர கழுதைதான் அந்தத் தம்பதிக்கு உதவியது.
2001 ஆம் ஆண்டு தேனிமாவட்டம். கடல் மட்டத்திலிருந்து 4000 உயரத்தில் இருக்கும் மலைகிராமம் அது. வாட்டியெடுக்கும் அடைமழை காலம். வெளியுலகின் வாசனையற்ற அந்த மலைகிராமத்தில் வாழும் செல்விக்கு பத்துநாட்கள் முன்னதாகவே பிரசவவலி. வந்து சில ஆண்டுகளே ஆன பொதுச்சுகாதார நிலையம் பூட்டிக்கிடக்கிறது. கணவன் பொன்னுச்சாமி பதறியடித்து, அந்த ஊருக்கு இருமுறை வந்துசெல்லும் தனியார் ’ஜீப் டிரைவருக்கு’ போன் செய்கிறார். அவரோ, ” ஊத்துற மழையில் வண்டியெடுத்தா வழியிலயே உருளவேண்டியதுதான். கோதாரியில தோட்டிக் கட்டி இறக்கிட்டு சோத்துப்பாறைக்கு வந்துடுங்க. நான் அடிவாரத்துக்கு வந்துடுறேன்” என்கிறார்.
மனம்முழுவதும் அழுத்தும் பீதியோடு கழுதையோட்டியின் வீட்டுக்கு ஓடுகிறார் பொன்னுசாமி. இரண்டு கோதாரிக் கழுதைகள் கழுத்தில் நுகத்தடி கட்டி பூட்டப்படுகிறது. கழுதைகளின் முதுகில் ஒரு கயிற்றுக்கட்டில் பிணைக்கப்பட, அதில் செல்வியை படுக்க வைத்து அழைத்துச் செல்கிறார்கள். அடுத்த இரண்டுமணிநேரத்தில் அடிவாரம் வந்துச்செரும் செல்வியையும் அவனது கணவனையும் அழைத்துச் சென்று பெரியகுளம் மருத்துவமனையில் சேர்க்கிறார் ஜீப் டிரைவர். இன்று செல்வியின் மகன் 6- வகுப்பு படிக்கிறான். பள்ளிசெல்லும் வழியிலோ பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியிலோ அவன் கழுதைகளை பார்க்க நேர்ந்தால், அவற்றை கையெடுத்து கும்பிடுகிறான். கழுதைகளை வணங்க தனது மகனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார் அந்த மலைகிராமத்துத் தாய்.
வரலாற்றில் வாழும் சுமைதாங்கி.
எதற்கும் பயன்படாதவர்களையும், உடனுக்குடன் சிந்திக்க முடியாதவர்களையும் ” கழுதைகள்” என்று திட்டித் தீர்க்க பழகியிருக்கிறது நம் சமூகம். ஆனால் மனிதகுலத்துக்காகவே, இந்த பூமியில் யுகங்கள் கடந்து சுமைதாங்கியாக வாழ்ந்து வந்திருக்கும் கழுதைகள், அவற்றுடன் நேரடித்தொடர்பற்ற மனிதர்களால் கண்டுகொள்ளப்பட்டதே இல்லை. அதனால்தானோ என்னவோ, இயேசு ஒரு போதகராக அறியப்பட்டப்பின், தான் பிறந்த ஊரான ஜெருசலேமுக்கு திரும்ப வரும்போது, அந்த நகரின் மக்கள் அவருக்கு குருத்தோலைகள் அசைத்து, வழிநெடுகிலும் துணிகளை விரித்து அவரை வரவேற்றார்கள். அப்போது இயேசு, குட்டிசுவர் அருகில் நின்றிருந்த ஒர் இளங் கழுதையின் முதுகில் ஏறி ஊருக்குள் வந்தார். இயேசு நினைத்திருந்தால், உலகெங்கும் அரசாட்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு குதிரையில் ஏறிவந்திருக்க முடியும். ஆனால் மனிதர்களின் மனங்களில் புறக்கணிக்கப்பட்ட விலங்காகிப்போன , கழுதைகளை அவர் கௌரவப்படுத்த நினைத்தார். அந்த இயேசுவைபோலவே கழுதைகளை மதித்து வாழ்கிறார்கள் உலகம் முழுவதும் உயரமான மலைப்பகுதிகளில் வாழும் மக்கள். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
மலை மக்களின் விலைமதிப்பற்ற நண்பன்
தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலையைக் கொடையாகப்பெற்ற மாவட்டங்களில் ஒன்று தேனி. இங்கே கடல் மட்டத்திலிருந்து 4,000 அடிகள் உயரத்தில் அமைந்திருக்கும் அகமலை ஊராட்சிக்கும், அதை ஒட்டியுள்ளள ஊத்துக்காடு, ஊரடி, குறவன்குழி, பெரிய மூங்கில், சின்ன மூங்கில், சுப்பிரமணியபுரம், பேச்சியம்மன் சோலை, குண்டன்சி, வக்கீல் எஸ்டேட், சுப்பிரமணியபுரம், கரும்பாறை, கொத்தமல்லிக்காடு என்று 25க்கும் குறையாத கிராமங்கள். ஐயாயிரம்பேருக்கும் குறையாத மக்கள் வசிக்கும் இங்கே, ஆரஞ்சு, எலுமிச்சை, நார்த்தை, மிளகு, ஏலம், பலா, சபோர்ட்டா, கொய்யா, மலைவாழை, பப்பாளி, பீன்ஸ், சௌ சௌ, காபி என்று மலைவளத்துக்கே உரிய பயிர்களை சாகுபடி செய்கிறார்கள். தினசரி இரண்டு முறை வந்து செல்லும் தனியார் ஜீப்புகள்தான் இவர்களுக்கு இருக்கும் ஒரே வாகன வசதி. ஆட்களை ஏற்றவே அடிதடியாக இருக்கும்போது சுமைகளையும், தங்கள் விளைக்பொருட்களையும், பெரியகுளத்துக்கும், தேனிக்கும், கேரளத்துக்கும் சென்னைக்கும் வாங்கிச்செல்லும் வியாபாரிகளிடம் விற்க வேண்டுமானால் சொத்துப்பாறைக்கு வந்தாக வேண்டும். தலைச்சுமையாக சுமந்துகொண்டு, மலையிலிருந்து மனிதர்களால் கீழே இறங்கமுடியுமா? இங்கேதான் தங்கள் முதுகுகளை தோள்போல் மலைவாழ் மக்களுக்கு கொடுக்கின்றன கழுதைகள். உற்ற நண்பனைபோல ஒரு வார்த்தை பேசாமல் விளைபொருட்களை சுமந்துகொண்டு கரடுமுரடான மலைப்பாதை வழியாக கீழே இறங்கும் ’கோதாரிக் கழுதைகளை’ கொண்டாடுகிறார்கள் இங்கே வாழும் மக்கள். கோவேறுக் கழுதைகளில் இருந்து அவர்கள் இப்படியொரு பெயரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இவற்றின் உயரம் குறைவாக இருப்பதாலும் குதிரைகளின் சாயலும் கொஞ்சம் இருப்பதால் இவற்றுக்கு ‘மட்டக் குதிரை’ என்றும் அழைப்பதுண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B7v8qeL
via IFTTT