திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அரசர் காலம் முதலே பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. மடம் சார்ந்த நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு தினமும் திருமலையில் அன்னதானம் செய்து வந்தனர். அதன் பின்னர், திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்டதும், என்.டி.ராமாராவ் ஆட்சியில் கடந்த 1983-ம்ஆண்டு முதல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான திட்டம் அதிகார பூர்வமாக செய்ய முடிவு செய்யப்பட்டது. அதாவது, பக்தர்கள் சுவாமி உண்டியலில் செலுத்தும் காணிக்கையை அரசு சார்ந்த வங்கிகளில் டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வட்டி பணத்தில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் செய்வது என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதான திட்டம் என்.டி.ஆர் மூலமாக தொடங்கப்பட்டது. அவரது ஆட்சி காலத்தில் தான் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸும் கட்டப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானம் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 2.5 லட்சம் பக்தர்களுக்கு திருமலை மற்றும் திருப்பதி, திருச்சானூரில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZQBMzsV
via IFTTT