89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சுத்தமான சுற்றுச்சூழல் வெற்றியைத் தரும் | சக்ஸஸ் ஃபார்முலா - 18

சுத்தமான சுற்றுச்சூழல் வெற்றியைத் தரும் | சக்ஸஸ் ஃபார்முலா - 18

சச்சு சில நாள்களாகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். விடுதி அறைக்கு வந்த பின்னும், மீதி அலுவலக வேலைகளை முடித்து விட்டுத் தூங்கச் செல்வது வழக்கமாகி இருந்தது. அந்த ஒரு வாரத்தில் அவர் படுக்கை, வேலை செய்யும் இடம் எல்லாம் குப்பையாக மாறி இருந்தன.

“நஸீ, என் டேபிள்ல இருந்த பைல்ல பார்த்தியா?”

“இல்லையே சச்சு...”

“ஐயோ, அது கிடைக்கலனா, அவ்வளோதான். தூக்கம் இல்லாம பண்ண வேலை எல்லாம் வீணாகிரும்.”

“புலம்பாம நான் சொல்றதைக் கேளு, முதல்ல உன் மேசையை , படுக்கையை, அலமாரியை ஒழுங்குபடுத்து.”

“இப்ப அவசரமாக அந்த பைல் வேணும்னு சொல்றேன். நீ சுத்தம் செய்ன்னு சொல்ற?” என்று எரிச்சலுடன் சொன்னார் சச்சு.

சச்சு மட்டுமல்ல நம்மில் பலருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. நம் சுற்றுப்புறத்தின் மீது அதிகக் கவனம் செலுத்துவது கிடையாது. முடியும் போது கொஞ்சம் தூசி தட்டுவதோடு சரி.

நம் சுற்றுச் சூழல் எப்படியோ அப்படியே நம் உற்பத்தித் திறனும் இருக்கும் என்று உளவியாளர் பலர் கூறுகின்றனர். குறிப்பாக உளவியல் துறையின் முக்கிய ஜாம்பவானான கேர்ட் லெவின் (Kurt Lewin) இதை ஒரு சூத்திரத்தில் விளக்கிவிடுகிறார்.

கேர்ட் லெவினின் நடத்தைச் சமன்பாடு உளவியலில் சுற்றுப்புறத்தின் முக்கியத்துவத்தைச் சொல்கிறது.

B = f (P, E)

இங்கே:

B என்பது நடத்தை (Behavior)
f என்பது சார்பு (function)
P என்பது நபர் (Person)
E என்பது சுற்றுச்சூழல் (Environment)

இந்தச் சமன்பாட்டின் முக்கியக் கருத்து என்னவென்றால், ஒரு தனிநபரின் நடத்தையை அல்லது செயலைப் புரிந்துகொள்ள அந்த நபரின் தனிப்பட்ட பண்புகளையும், அவரது சுற்றுச்சூழலையும் கவனித்தால் போதும் என்கிறார். ஒரே நபர் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு விதமாக நடந்துகொள்வது இயல்பு.

உதாரணத்திற்கு, ஒரு வேலை செய்யும் போது அலைபேசியை அருகில் வைத்துக் கொள்வதற்கும் தொலைவில் வைத்துக் கொள்வதற்கும் இருக்கும் வித்தியாசம் நம் அனைவரும் அறிந்ததே.

உடல் மற்றும் உளவியல்ரீதியாக நமது சுற்றுச் சூழல், வெற்றி பெறும் நமது திறனில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குப்பை நிறைந்த, ஒழுங்கற்ற இடம் மனச் சோர்வை ஏற்படுத்தி கவனத்தைக் குறைக்கிறது. அதே நேரத்தில் சுத்தமான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சூழல் சிந்தனையின் தெளிவை மேம்படுத்தி ஊக்கத்தை அதிகரிக்கிறது. இதைக் கடைபிடிக்காமல் விடுவதால்தான், பலரது திறமை வெற்றியை எட்டாமல் போய்விடுகிறது.

யானை பெரிதாக இருந்தாலும் அதன் காதில் எறும்பு சென்றால் அது கொடுக்கும் குடைச்சல் பெரிது. அதைப் போலவே சூழலை ஒழுங்காக வைக்காத தன்மை வெற்றியை விழுங்கிவிடும்.

சொல்லப் போகும் பத்து விஷயங்களைக் கடைபிடித்தால், நம் சுற்றுச் சூழலை நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும்.

சுற்றுச்சூழல் பராமரிப்புக்கான முக்கிய உத்திகள்:

1. ‘ஒவ்வொன்றுக்கும் ஓர் இடம்’ கொள்கையைப் பின்பற்றுங்கள்: ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்குங்கள். பயன்படுத்திய பிறகு அந்தப் பொருளை அதன் இடத்திற்கே திருப்பி வைக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்.

2. உங்கள் பணியிடத்தைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருங்கள். ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் சுத்தம் செய்வதற்கு ஒதுக்குங்கள். இது பெரிய குப்பைகள் சேர்வதைத் தடுக்கும். கவனச்சிதறல்களைக் குறைத்து, முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த உதவும்.

3. ‘ஒன்று வந்தால், ஒன்று போகட்டும்’ விதியைப் பின்பற்றுங்கள்: புதிய பொருள் ஒன்றை வாங்கும்போது, பழைய தேவையற்ற ஒன்றை அகற்றுங்கள். இது தேவையற்ற பொருள்கள் குவிவதைத் தடுக்கும்.

4. நமது டிஜிட்டல் யுகத்தில், டிஜிட்டல் குப்பைகளை நிர்வகிப்பது அதே அளவு முக்கியமானது. நேரத்தை மிச்சப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உங்கள் கோப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகளைத் திறம்பட ஒழுங்கமைக்கவும்.

5. உங்கள் சூழலில் செடிகள் அல்லது இயற்கை ஒளி போன்ற இயற்கைக் கூறுகளைச் சேர்க்கவும். இவை மன அழுத்தத்தைக் குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்கும்.

6. வசதியான பணியிடம் உடல் சோர்வைக் குறைத்து, நீண்ட நேரம் கவனம் செலுத்தி வேலை செய்ய உதவும்..

7. உங்கள் சூழலில் ஒலி அளவைக் கட்டுப்படுத்தவும். அதிகக் கவனம் தேவைப்படும் பணிகளுக்குச் சத்தம் ரத்து செய்யும் ஹெட்போன்களைப் பயன்படுத்தவும் அல்லது அமைதியான பகுதிகளை உருவாக்கவும்.

8. உங்கள் இலக்குகளை நோக்கி உங்களை ஊக்குவிக்கும் மேற்கோள்கள், அல்லது கலைப் பொருள்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

9. உங்கள் சூழலைப் பராமரிக்கத் தொடர்ந்து நேரம் ஒதுக்கவும். அது சில மணித்துளிகளாக இருந்தாலும் போதுமானதாக இருக்கும்.

10. உங்கள் சூழலை உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் வேலை பாணிக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தவும். ஒருவருக்குப் பொருந்துவது மற்றொருவருக்குப் பொருந்தாமல் போகலாம்.

சச்சு தன்னுடைய இடத்தை ஒழுங்காக வைத்திருந்து இருந்தால், பைலைத் தேடி பதற்றமாகாமலிருந்து இருக்கலாம். அவர் சூழல் மனச் சோர்விலிருந்தும், அழுத்தத்தில் இருந்தும் அவரைப் பாதுகாத்திருக்கும். சரியான மனநிலை இருக்க வேண்டும் என்றால் சரியான சூழல் அவசியம்.

கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | தொடர்புக்கு: writernaseema@gmail.com



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IGLR7sE
via IFTTT