திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, உற்சவர்கள் முதலில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டனர். இதையடுத்து பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 1.45 மணியிலிருந்து காலை 6 மணி வரை விஐபி பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பிறகு காலை 6 மணி முதல் சாமானிய பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால், திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. லட்டு பிரசாத மையம், அன்னதான சத்திரம், தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், தங்கும் அறைகள் வழங்குமிடம் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமலை மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய், மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i7xp5zL
via IFTTT