89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஒரே கத்தி ஓஹோன்னு சமையல்: வில்லேஜ் குக்கிங் கேரளா 

ஒரே கத்தி ஓஹோன்னு சமையல்: வில்லேஜ் குக்கிங் கேரளா 

டசடவென்று பொழியும் மழையும் புள்ளினங்களின் கீச்சிடலும் சிலுசிலுசிலுக்கும் காற்றும் பின்னணி அமைக்க, நேர்த்தியாக உருவாகும் இசையைப் போலவே ரசித்துச் சமைக்கிறார் ஓமனா அம்மா. 67 வயதாகும் இவர் சமைக்கும்போது துளிகூடச் சிரிப்பதில்லை; வேறெதிலும் கவனம் செலுத்துவதில்லை. “வேலை செய்யும்போது சிரிப்பது எனக்குப் பிடிக்காது” என்று சொல்லும் ஓமனா, கைகால்களை உதறியபடி வார்த்தைகளைக் கடித்துக் குதறி, காதில் ஈயத்தை ஊற்றுகிற தொகுப்பாளர்களிடம் இருந்து நமக்கு விடுதலை தருகிறார்.
கேரளம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ஓமனா. இவருடைய உறவினர்களான அம்ஜித், அபிஜித் இருவரும் சிறுவயதில் இவரது சமையலை ருசித்தவர்கள். தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற ‘ராகுல்காந்தி புகழ்’ ‘வில்லேஜ் குக்கிங்’ சேனலைப் பார்த்துத்தான் தங்களுக்கு இப்படியொரு எண்ணம் உதித்ததாகச் சொல்கிறார்கள் இந்தச் சகோதரர்கள். கேரளத்தின் எழில் கொஞ்சும் இயற்கைப் பின்னணியில் கேரளத்தின் உணவு வகைகளைச் சமைப்பதுதான் இவர்களது திட்டம். இதற்கு ஓமனா அம்மாவைச் சம்மதிக்க வைக்கவே ஆறு மாதங்களாகினவாம்!
2018இல் தொடங்கப்பட்ட இவர்களது, ‘வில்லேஜ் குக்கிங் - கேரளா’ யூடியூப் சேனலுக்குத் தற்போது பத்து லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள். இவர்களது முகநூல் பக்கத்தையும் லட்சக்கணக்கில் பின்தொடர்கிறார்கள். இவர்கள் வெளியிடுகிற வீடியோக்களில் சில கொஞ்சம் நீளமானவையாக இருந்தாலும் செய்முறையின் நேர்த்தியில் நாம் கண்ணிமைக்க மறந்துவிடுகிறோம்.

ஓமனா


ஓமனா அம்மா சமைப்பதைப் பார்ப்பதே பசியாற்றும். அவர் காய்கறிகளை நறுக்குவதைப் பார்ப்பது அலாதியானது. சிறு கத்தியை வைத்து, காய்கறிகளைக் கையில் பிடித்தபடியே அவர் லாவகமாக நறுக்குவது அவ்வளவு அழகு. பீட்ரூட்டைத் தோல் சீவி, கையில் பிடித்தபடியே சிறு சிறு கீறுகளாக வகுந்து, அதையும் பொடியாக நறுக்குவது தேர்ந்த சிற்பி சிலையை வடிப்பதுபோல் இருக்கிறது. ஓமனா பயன்படுத்தும் கத்திக்கு 27 வயது! இவ்வளவு வருட உழைப்பில் அது தேய்ந்துவிட்டது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு வருமோ என்று வருதத்தோடு சொல்கிறார் ஓமனா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PU1GwV
via IFTTT