சர்வதேசப் புகையிலை எதிர்ப்பு தினத்தை (மே 31) ஒட்டி எஸ்.ஜெ. ஜனனி இசையமைத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கும் விழிப்புணர்வுப் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. சென்னை சமூக ஆன்மிக அமைப்பான பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஐஷ்வர்ய விஷ்வ வித்யாலயாவின் ஆதரவுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலை பி.கே.குமார் எழுதியிருக்கிறார்.
பாரம்பரியமான கர்நாடக இசையை இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, நெய்வேலி சந்தானகோபாலன், இஞ்சிக்குடி கணேசன் ஆகியோரிடம் பயின்றிருப்பவர் ஜனனி. மேற்கத்திய இசையை அகஸ்டின் பாலிடம் பயின்றிருக்கிறார். மேற்கத்திய இசைக் கோட்பாடு, செயல்முறை இரண்டிலும் புகழ்பெற்ற லண்டன் டிரினிடி இசைப் பள்ளியில் முடித்திருப்பவர். இசையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வை செய்துவருபவர்.
கரோனா பேரிடருக்கு முன்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். ‘கேளுங்க... கேளுங்க... முதியோரே கேளுங்க.../ இளையோரே கேளுங்க... சிறியோரே கேளுங்க...’ மிகவும் இயல்பான வார்த்தைகளில் தொடங்குகிறது பாடல். தொடர்ந்து புகையிலை, மது உள்ளிட்ட எந்தவிதமான போதையின் பாதையிலும் பயணிக்க வேண்டாம் என்று வலியுறுத்துவதோடு, அப்படி போதையின் பாதையில் சிக்கிக் கொண்டவர்களை ராஜயோகத்தின் மூலமாக மீட்பதற்கான உபாயத்தையும் அறிவுறுத்தித் தேற்றுகிறது பாடல்.
கீபோர்டில் மரபு மீறாத கர்னாடக இசையையும் மேற்கத்திய இசையையும் வாசிக்கும் ஜனனி, பாடகர், வாத்தியக் கலைஞர் என்பதோடு அல்லாமல் தன்னை ஒரு இசையமைப்பாளர் என்னும் நிலைக்கும் உயர்த்திக் கொண்டவர். தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரின் புகழ்பெற்ற கீர்த்தனைகளை மேற்கத்திய வாத்தியமான கீபோர்டில் இசைத்து வெளியிட்டிருக்கிறார். சிலப்பதிகாரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து `சிலம்போசை’ என்னும் பெயரில் குறுந்தகடாக வெளியிட்டிருக்கிறார். மகாகவி பாரதியாரின் பாடல்களுக்கு இசையமைத்து `வந்தே மாதரம் ’ என்னும் பெயரில் இசை ஆல்பம் வெளியிட்டிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=OsrT21bHda4
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EsnXbtS
via IFTTT