89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்
பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலத்திற்கு பெயர் பெற்ற இடமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 16-ந் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

இந்த நிலையில், நேற்று ஆனிதிருமஞ்சன தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு ரகசிய பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத ஆனந்தநடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு மூலவராகிய ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சித்சபையில் இருந்து கனக சபைக்கு எழுந்தருளினர்.

இதையடுத்து சுவாமி புறப்பாடாகி, கோவில் உட்பிரகார வலம் வந்து, தட்சணாமூர்த்தி சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் முன்னும், பின்னுமாக நடனமாடியவாறு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதனை தொடர்ந்து, 21 படிகள் வழியாக கீழவீதி தேர் மண்டபத்துக்கு சுவாமி வந்தடைந்தது. தேர் மண்டபத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் கோவில் பொது தீட்சிதர்கள் முன்னிலையில் மண்டகபடி பூஜை நடைபெற்றது. பின்னர், காலை 7.10 மணியளவில் ஆனந்தநடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். காலை 8.10 மணியளவில் விநாயகர் தேரை பக்தர்கள் முதலில் வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டது.

பின்னர் காலை 8.30 மணிக்கு மூலவர் நடராஜர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதியில் 5 தேர்களும் வலம் வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது. தேர் மேலவீதி கஞ்சித்தொட்டிமுனை சந்திப்பில் நிறுத்தப்பட்டபோது, பருவதராஜகுல சமுதாயம் சார்பில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரருக்கு பட்டு சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் தேர்கள் அனைத்தும் நிலையை வந்தடைந்தது.

தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். பின்னர், அங்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

ஆனி திருமஞ்சன மகா தரிசன நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணி முதல் 6 மணி வரை மூலவர் ஆனந்தநடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு ரகசிய பூஜை நடக்கிறது. இதையடுத்து, திருஆபரண அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு மேல் மகா தரிசன நிகழ்வு நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது.