89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வீடுகளுக்கான மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது

வீடுகளுக்கான மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது





தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளது.

மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சில வருடங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதில்லை.

கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் உள்ள வீடுகளுக்கு ஒருமுனை மின்சார இணைப்பு பெற தற்போது ரூ.1,600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ரூ.9,800 ஆக உயர்த்த உள்ளனர்.
மும்முனை மின்சார இணைப்பு கட்டணத்தை ரூ.7,475-ல் இருந்து ரூ.35 ஆயிரம் ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ரூ.18 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தொழிற்சாலைகள், வர்த்தக மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், முடிவு செய்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் பெறுவதற்கும், மின் கட்டணத்துக்கு கொடுக்கும் காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பினால் அதற்காக வசூலிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளன.

புதிய கட்டண உயர்வை அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் பரிந்துரையை ஒழுங்கு முறை ஆணையம் அப்படியே ஏற்றுக் கொள்ளுமா? அல்லது மறுபரிசீலனை செய்ய சொல்லுமா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

ஆணையம் ஒப்புதல் வழங்கியதும் புதிய கட்டண உயர்வு எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். #TNEB