89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : எல்லா நம்பிக்கைகளும் நம்பிக்கையல்ல! | சக்ஸஸ் ஃபார்முலா - 14

எல்லா நம்பிக்கைகளும் நம்பிக்கையல்ல! | சக்ஸஸ் ஃபார்முலா - 14

“நஸீ நாளைக்கு என் கரீயர்ல ரொம்ப முக்கியமான நாள்… நாளைக்கு என் பாஸ், அவரோட பாஸ் எல்லாம் இருப்பாங்க. பெரிய கூட்டத்துக்கு முன்னாடி, எங்க டீம் சார்பா பேசணும். டீமுக்குள்ளனா பேசிடலாம். இவ்வளவு பேர் முன்னாடி கண்டிப்பா என்னால முடியாது” என்றார் சச்சு.

சரி, கதை சொல்ல நேரம் வந்துவிட்டது. யானைப் பாகன் ஒரு பெரிய யானையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எப்படி என்று தெரிந்து கொண்டால், சச்சுவின் குழப்பத்திற்கும் விடை கிடைத்துவிடும்.

யானை குட்டியாக இருந்தது முதல் அதை ஒரு கம்பத்தில் கட்டிவைப்பார்கள். அந்தச் சங்கிலி குட்டியானைக்கு பலமானதாக இருக்கும். சின்னதாக இருக்கும் போது அது அங்கிருந்து ஓடப் பார்க்கும். ஓர் எல்லைக்கு மேல் வந்தால் அதை அடித்து அடக்குவார்கள். அந்தக் குட்டி யானையும் தன் சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அதே இடத்தில் இருக்கப் பழகிக்கொள்ளும். அது மலை போல் பெரிய யானையாக மாறிய பின்னும் கம்பத்தில் கட்டி வைத்திருக்கும் சங்கிலியைப் பிடுங்கிக் கொண்டு ஓடாது. ஆனால், அதற்கு இருக்கும் சக்திக்குப் பாகனை மட்டுமல்ல அந்த ஊர் மக்களையும் அதனால் துவம்சம் செய்ய முடியும்.

யானையிடம் இருப்பது ‘லிமிட்டிங் பிலீஃப்’. அதாவது ஒன்றுக்கும் உதவாத ஓர் எல்லைக்குள் வைத்திருக்கும் நம்பிக்கைகள். அவநம்பிக்கைள் என்றும்கூடச் சொல்லலாம்.

யானையும் சச்சுவும் இந்த விஷயத்தில் ஒன்றுதான். சச்சு போல நம்மில் பலருக்கு ஒன்றுக்கும் உதவாத நம்பிக்கைகள் பல இருக்கின்றன. அந்தப் பாகனைப் போல் நமது சூழல், சமூகம், சொந்த அனுபவங்கள் அனைத்தும் தேவை இல்லாத நம்பிக்கைகளை விதைத்துள்ளன. உதாரணத்திற்கு:

1. குள்ளமாக இருந்தால் கம்பீரமாக இருக்க முடியாது.
2. மாநிறமாக இருந்தால் அழகில்லை.
3. தமிழ் மீடியத்தில் படித்ததால் ஆங்கிலம் சரளமாகப் பேச முடியாது.
4. வயதாகிவிட்டால் கற்றுக் கொள்ள முடியாது.
5. வெளியே சென்று வேலை செய்ய என்னால் முடியாது.

லிமிட்டிங் பிலீஃப் நம்மை வளரவிடாமல் செய்யும். எதையும் முயற்சி செய்து பார்க்கத் தூண்டாது. சுருக்கமாகச் சொன்னால் உங்கள் வெற்றியை உங்களை வைத்தே அழித்துவிடும். கரோனா வைரஸுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தொற்றின் வீரியம் அதிகமானால் உயிருக்கு ஆபத்து. அவநம்பிக்கைகளின் வீரியம் அதிகமானால் வாழ்க்கை வீணாகும்.

பிரச்சினைகள் என்றால் அதற்கான தீர்வும் இருக்குமல்லவா? லிமிட்டிங் பிலீஃபை விரட்டுவது சுலபமான காரியம்தான். ஆனால் அதற்கான சில வழிமுறைகளையும் தெளிவுகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

1. நமக்குள் இருக்கும் சில தேவையற்ற நம்பிக்கைகள்தான் நமக்கான தடைக்கற்கள் என்கிற தெளிவு இருக்க வேண்டும். நோயைக் கண்டுபிடித்தால்தானே மருந்து சாப்பிட முடியும்.

2. எந்த நம்பிக்கைக்கும் ஓர் அடிப்படைக் காரணம் இருக்கும். அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். காரணம் தெரிந்து விட்டால் மற்ற வேலைகள் சுலபமாகும்.

3. அந்த அவநம்பிக்கைகளைக் களைத்து எறியச் சில சூழல்களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சச்சுவிற்கு நான்கு பேர் முன்பு பேச முடியும். அதுவே நாற்பதானால் முடியாது. அப்படி இருக்கையில் முதல் படியாக, பத்துப் பேர் உள்ள அரங்கில் பேச வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

4. போன அத்தியாயத்தில் பார்த்த, செல்ஃப் டாக் இங்கு உதவும். ‘நாலு பேர் முன்னாடி என்னால் பேச முடிகிறதென்றால், நானூறு பேர் முன்னாடியும் பேச முடியும்’ என்று தனக்குள் பல முறை சொல்லிக் கொள்ள வேண்டும்.

5. அவநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டால் வரும் நன்மைகளை, வெற்றிகளைக் காட்சிப்படுத்திப் பார்க்கலாம். எண்ணங்கள், காட்சிகள் அனைத்தும் மனதால் நம்மைத் தயார் செய்யும் கருவிகள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

6. சரியான நண்பர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் உங்கள் நிறைகுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொண்ட குறைகளைக் களைய என்ன செய்யலாம் என்று திட்டமிடுங்கள்.

7. சிறு வயது முதல் அனுபவங்களால் கிடைத்த அவநம்பிக்கைகளை ஒரு நாளில் மாற்றிவிட முடியும் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம்.

8. செல்ஃப் டாக், எண்ணங்களை விழிப்புணர்வோடு கவனிப்பது போன்ற பயிற்சிகள் பலன்களைத் தரும்

9. சரியான முடிவுகளை எடுக்க இந்த லிமிட்டிங் பிலீஃப் ஒரு போதும் விடாது என்கிற விழிப்புணர்வு வேண்டும். உங்கள் அவநம்பிக்கைகளைச் சரியான நேர்மறையான நம்பிக்கைகள் மூலம் மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

10. உங்களுக்கு நீங்களே சவால் விடுத்து அதிலிருந்து விடுபடத் தயாராக வேண்டும்.

பேச முடியாது என்று நினைத்து கவலையான சச்சு, சூழலைச் சவாலாக எடுத்துக் கொண்டார். மறுநாள் தன் குழு சார்பாகப் பெரிய அரங்கத்தில் தான் பேச வேண்டியதைச் சரியாகப் பேசி முடித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0ENDZV5
via IFTTT