89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க எளிய வழி காட்டும் புதிய ஆராய்ச்சி

உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க எளிய வழி காட்டும் புதிய ஆராய்ச்சி

புதிய விஷயங்களை நினைவில் கொள்ளும்போது யாருமே சற்று சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், எந்த வேலையும் செய்யாமல் `சும்மா' அமர்ந்திருப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க ஓர் எளிய வழி


மங்கலான வெளிச்சத்தில் சாய்ந்து அமர்ந்து நினைவுகளை ஒருமைப்படுத்த வேண்டும். 10-15 நிமிடங்கள் அமைதியான சூழலில் அமர்ந்திருந்தால் உங்கள் நினைவுத்திறன் சிறப்பாக செயல்படுவதை உணரமுடியும். இதன் மூலம் அந்த நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்த நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் கிடைக்கும் பலனைவிட அதிக பலன் கிடைக்கும்.
எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கும்போது, பிற செயல்களை தவிர்ப்பது அவசியம். இது மூளையில் நினைவுகள் பதிவதை பாதிக்கும். இ மெயில் பார்ப்பது, ஸ்மார்ட்ஃபோன் பார்ப்பது ஆகியவற்றை இச்சமயங்களில் தவிர்க்க வேண்டும். எந்த இடையூறுகளும் இன்றி மூளை தன்னை வளப்படுத்திக்கொள்ள அனுமதிப்பது அவசியம்.
படிப்பில் மந்தமான மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மறதி நோய், சில வகை டிமென்ஷியா எனப்படும் நினைவுத்திறன் இழத்தல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது நல்ல பலனைத் தரும்.
எந்த இடையூறுகளுமற்ற ஓய்வான சமயத்தில் நினைவுத்திறனை மேம்படுத்த முயற்சிப்பது சிறந்த பலனை தரும் என்பது 1900-ஆம் ஆண்டிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி உளவியலாளர் ஜார்ஜ் இலியாஸ் மியூலெர் மற்றும் அல்ஃபோன்ஸ் பில்ஜெக்கர் ஆகியோர் இதை உறுதி செய்து ஆவணப்படுத்தினர். இதற்காக சிலரை வைத்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க ஓர் எளிய வழி

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களிடம் எவ்வித பொருளும் தராத ஒலிக்குறிப்புகளை கற்குமாறு மியூலெரும் பில்ஜெக்கரும் பணித்தனர். கற்பதற்கு சிறிது அவகாசம் தந்த பிறகு அவர்களில் ஒரு பகுதியினரிடம் உடனடியாக மேலும் சில ஒலிக்குறிப்புகள் வழங்கப்பட்டன. மற்றொரு பிரிவினருக்கு ஆறு நிமிட இடைவெளிக்கு பிறகு ஒலிக்குறிப்புகள் வழங்கப்பட்டன.
ஒன்றரை மணி்நேர இடைவெளிக்குப்பிறகு அந்த இரு பிரிவினருக்கும் வழங்கப்பட் ஒலிக்குறிப்புகளை நினைவுபடுத்தி கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதில் கிடைத்த பதில்களில் குறிப்பிடத்தக்க அளவு மாறுபாடுகள் தெரியவந்தன.
ஓய்வு கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒலிக்குறிப்புகளில் 50 சதவிகித்தை சரியாக நினைவுகூர்ந்தனர். இடைவெளியே அளிக்கப்படாமல் ஒலிக்குறிப்பை படித்தவர்கள் 28% அளவுக்கே அவற்றை மீண்டும் நினைவுபடுத்த முடிந்தது. தகவல்கள் மூளையின் நினைவகத்தில் பதிந்துகொண்டிருக்கையில் புதிய தகவல்கள் வந்துகொண்டே இருப்பது நினைவகப் பதிவுப்பணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதிலிருந்து தெரிகிறது. இது தொடர்பாக உளவியலாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ந்து ஆய்ந்தறிந்த போதும் 2000-ஆவது ஆண்டிலேயே இதைப்பற்றி விரிவாக அறிய முடிந்தது.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் செர்கியோ டெல்லா சலா மற்றும் மிசோரி பல்கலைக்கழகத்தின் நெல்சன் கோவன் ஆகியோரின் ஆய்வுகள் இதற்கு முன்னோடியாக இருந்தன. மூளையில் நினைவுப்பதிவின்போது இடையூறுகள் குறைந்தால் பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் ரீதியான பாதிப்புக்குள்ளானவர்களின் நினைவுத்திறனை மேம்படுத்துமா என்றும் கண்டறிய இக்குழு ஆர்வம் கொண்டிருந்தது.
மியுலெர் மற்றும் பில்ஜெக்கரின் அதே பணியில் சலாவும் கோவனும் ஆய்வு மேற்கொண்டனர். சோதனைக்குட்படுத்தப்பட்டவர்களுக்கு 15 வார்த்தைகள் கொடுக்கப்பட்டன.
இச்சோதனைகளின்போது இடையறாது தொடர் ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டனர். மற்றும் சிலர் இருட்டு அறையில் தூக்கம் வராத வகையில் படுக்கவைக்கப்பட்டிருந்தனர். சிறு இடையூறுகளும் நினைவுப்பதிவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது இச்சோதனையில் உறுதியானது. இதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய வார்த்தைகளின் எண்ணிக்கை 14 சதவிகிதத்தில் இருந்து 49% ஆக உயர்ந்திருந்தது.
நரம்பியல் பாதிப்பற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த எண்களுக்கு இது இணையானதாகும். எனினும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இச்சோதனையில் எந்த பெரிய முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை
உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க ஓர் எளிய வழி
இது தவிர அடுத்த சோதனைகளின் முடிவுகளும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தன. இதில் சோதிக்கப்பட்டவர்களுக்கு சில கதைகள் கூறப்பட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஓய்வுக்கு வாய்ப்பளிக்கப்படாதவர்கள் கதையின் 7% தகவல்களையே சரியாக கூறினர். ஆனால் போதிய ஓய்வுக்கு பின் பதில் கூற வாய்ப்பளிக்கப்பட்டவர்கள் கூறிய பதில்கள் 79% சரியாக இருந்தது.
அதாவது நினைவுத்திறன் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் 11 மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரம் ஆரோக்கியமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நினைவுத்திறன் மேம்படல் 10% - 30% ஆக இருந்தது.
டெல்லா சலா மற்றும் கோவனின் மாணவரான மிஷேலா டெவார் இதில் தொடர் ஆய்வுகளை பல்வேறு பின்னணிகளில் மேற்கொண்டு வருகிறார். ஆரோக்கியமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் குறுகிய நேர ஓய்வு வாய்ப்பு என்பது மெய்நிகர் சூழலில் வெவ்வேறு இடக்குறியீடுகளையும் நினைவில் பதியுமளவுக்கு பலன் தரும் என்பது தெரியவந்தது. இது இளம் மற்றும் முதியவர்களுக்கும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆரம்ப நிலை அல்சைமர் நோயாளிகளுக்கும் பலன் தரும் என்பது தெரியவந்துள்ளது.
சோதனைக்குட்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும் மங்கலான வெளிச்சம் கொண்ட நிசப்தமான அறையில் அமர வைக்கப்பட்டனர். மொபைல் ஃபோன் போன்ற இடையூறு ஏற்படுத்தும் சாதனங்கள் ஏதும் தரப்படவில்லை. அதே நேரம் வேறு எந்த குறிப்பான அறிவுரையையும் தரவில்லை என்கிறார் டெவார்.
சோதனைகளின் முடிவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் வியக்கத்தக்க வகையில் பதில் தந்திருந்தனர்.
இந்த ஆய்வுகளில் இருந்து மூளையில் நினைவுப்பதிவு நடைமுறையை தெளிவாக அறியமுடியவில்லை. ஆனால் இதுபற்றிய சில மறைமுக விடைகள் கிடைத்துள்ளன.
நினைவுகள் முதலில் மூளையில் பதிந்து பின்னர் நிலைகொண்டு நீண்டகால பதிவாக மாறுகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிகழ்வு தூக்கத்தின்போதே பெரிதும் நிகழ்வதாக முன்பு கருதப்பட்டு வந்தது.
டெவாரின் பணிகளை தொடர்ந்து 2010ல் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லிலா டெவாச்சி என்பவர் சில ஆய்வுத்தகவல்களை வெளியிட்டார். நினைவுகள் மூளையில் பதிவது என்பது தூக்கத்தின்போது மட்டும் நடப்பதில்லை. விழித்திருந்தாலும், அமைதியான சூழலில் எடுக்கும் ஓய்வின்போதும் நினைவுப்பதிவு நடக்கும் என்கிறார் அவர்.

இவரது ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு ஜோடி ஜோடியாக படங்கள் காட்டப்பட்டன. அதாவது ஒரு முகம் மற்றும் பொருள் அல்லது காட்சி இணைத்துக்காட்டப்பட்டது. பிறகு அவர்கள் படுக்க அனுமதிக்கப்பட்டு குறுகிய நேரத்திற்கு அப்படியே இருக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஹிப்போகேம்பஸ் பகுதிக்கும் விஷுவல் கார்டெக்ஸ் பகுதிக்கும் தகவல் பரிமாற்றம் அதிகரித்துக்காணப்பட்டதை அவர் கண்டார். இது போன்று தகவல் பரிமாற்றம் அதிகம் நடக்கப்பெற்றவர்கள் அதிக நினைவுகளை இருத்திக்கொள்ளும் திறனை பெற்றிருந்தனர்.
இந்த ஆய்வுகள் குறித்து எய்டன் ஹார்னர் உள்ளிட்ட மற்ற உளவியலாளர்கள் உற்சாகமும் ஊக்கமும் அடைந்துள்ளனர்.
இது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பலவேறு நபர்களுக்கு சிகிச்சை தர இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
நினைவுத்திறனை அதிகரிக்க தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்குவது நடைமுறையில் கடினம் என்கிறார் எய்டன் ஹார்னர். எனினும் புதிய தகவல்களை மனதில் இருத்த இந்த நுட்பம் மிகவும் உதவும் என்கிறார் அவர். இதுபோன்று ஒரு மூதாட்டி குறுகிய ஓய்வில் தன் பேத்தியின் பெயரை நினைவுக்கு கொண்டுவர முடிந்ததாக டெவர் தம்மிடம் கூறியதாக சொல்கிறார் ஹார்னர்.
நாட்டிங்ஹாம் டிரென்ட் பல்கலைக்கழகத்தின் தாமஸ் பாகுலி என்ற பேராசிரியர் இதை வரவேற்றாலும் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்கிறார் அவர். அல்சைமர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே பல சிகிச்சை உத்திகள் வழங்கப்பட்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறார் அவர். மேலும் கடுமையான டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இதை செயல்படுத்த முடியாது என்கிறார் அவர்.
நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியான பலன் தவிர மாணவர்கள் உள்ளிட்டோருக்கும் பலன் தரும் என்கின்றனர் பாகுலியும் ஹார்னரும்...
பல மாணவர்களின் கல்வித்திறனில் 10% - 30% மேம்பாடு இருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எல்லா பக்கத்திலிருந்தும் தகவல்கள் கொட்டும் இக்காலத்தில் ஸ்மார்ட்ஃபோன்களை மட்டுமல்ல..மூளையையும் ரீசார்ஜ் செய்வது அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.